பிரித்தானியாவில் புதிய நாணயப் பதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மன்னர் மூன்றாம் சார்ல்ஸின் படம் அதில் பொறிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியா நாணயங்களை அச்சிட்டு வெளியிடும் ரோயல் மின்ட் அமைப்பு அதன் அதிகாரப்பூர்வ மாதிரியை வெளியிட்டுள்ளது.
பிரித்தானியா சிற்பி மார்டின் ஜென்னிங்ஸ் (Martin Jennings) அதற்கு வடிவம் கொடுத்துள்ளார். அந்த நாணயத்தில் லத்தீன் மொழியில் “King Charles III, by the Grace of God, Defender of the Faith” என்று எழுதப்பட்டிருக்கும்.
முதலில் மன்னரின் முகம் பொறிக்கப்பட்ட 5 பவுண்ட் மதிப்புள்ள சிறப்பு நாணயம் வெளியிடப்படும். அதேசமயம் மறைந்த இரண்டாம் எலிசபெத் அரசியாரின் வாழ்க்கையை நினைவுகூரும் ஒரு 50 சென்ட் நாணயமும் வெளியிடப்படவிருக்கிறது.
மன்னர் சார்ல்ஸின் முகம் இடது பக்கம் பார்ப்பது போல் நாணயத்தில் பொறிக்கப்பட்டுள்ளதுடன், எலிசபெத் அரசியாரின் முகம் நாணயத்தின் வலுதுபுறம் பார்ப்பது போல் அமைந்திருக்கும்.
இந்த புதிய நாணயங்கள் வரும் மாதங்களில் புழக்கத்துக்கு வரும் என கூறப்படுகின்றது. பிரிட்டனில் சுமார் 1,100 ஆண்டுகளாக அரசர் அல்லது அரசியின் உருவத்தை நாணயத்தில் பொறிக்கும் பழக்கம் இருந்துவருகிறது.
அந்தவகையில் நாணயங்களில் இதுவரை ஆக அதிகக் காலம் பொறிக்கப்பட்டிருந்த உருவம் இரண்டாம் எலிசபெத் அரசியாருடையது என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது முகம் பொறித்த 27 பில்லியன் காசுகள் தற்போது பிரித்தானியாவில் புழக்கத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.