காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் இரண்டு மாத நிலுவை மின்சார கட்டணத்திற்காக 240 இலட்சம் ரூபாவை மின்சார சபைக்கு செலுத்த வேண்டியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மின்கட்டணம் அதிகரிக்கப்படுவதற்கு முன்னர் கராப்பிட்டி போதனா வைத்தியசாலையின் மாதாந்த மின்கட்டணம் சுமார் 80 இலட்சம் ரூபாவாக இருந்த நிலையில், மின்கட்டண அதிகரிப்புடன் மாதாந்த மின்கட்டணம் 120 இலட்சம் ரூபாவாக அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை மின்சாரக் கட்டணத்திற்காக மாதாந்தம் 120 இலட்சம் ரூபாவை மின்சார சபைக்கு செலுத்த வேண்டியுள்ளது.
காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.டி.ஒய்.எம்.ரங்காவிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“மருத்துவமனையின் மின்கட்டணத்தைச் செலுத்துவதற்கு சுகாதார அமைச்சிலிருந்து ஒதுக்கீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதனால் பிரச்சினை இல்லை. ஆனால் மின் கட்டணம் செலுத்துவதில் சிறிது தாமதம் ஏற்படுகிறது. சுமார் இரண்டு மாத மின் கட்டண நிலுவையை செலுத்த வேண்டியுள்ளது. சுகாதார அமைச்சகத்திடம் இருந்து பணம் கிடைத்தவுடன், நிலுவையில் உள்ள மின் கட்டணம் செலுத்தப்படும்,” என்றார்.