தற்போது நாட்டில் மீண்டும் பரவ ஆரம்பித்திருக்கும் தட்டம்மை நோயைக் கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை அடுத்த வாரம் முதல் நாடுமுழுவதுமுள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களின் ஊடாக முன்னெடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பதிரண தெரிவித்தார்.
தட்டம்மை நோயை ஒழித்துள்ள நாடாக உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கையை அடையாளங்கண்டுள்ளது. ஆனால் கடந்த வருடம் சுமார் 700 அம்மை நோயாளர்கள் பதிவாகியுள்ளமை தொடர்பில் சுகாதார அமைச்சு விசேட கவனம் செலுத்தியுள்ளது.
சில காரணங்களால், தட்டம்மை நோய்க்கு எதிரான நோய் எதிர்ப்புச் சக்தியின் அளவு குறைவாக உள்ளதால் தற்போது நாட்டில் மீண்டும் தட்டம்மை நோய் ஏற்படுவதாக நம்பப்படுகிறது. எனவே, இந்த நிலையை கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகும்.
அதன்படி, ஜனவரி மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சுகாதார வைத்திய உத்தியோகத்தர் அலுவலகங்கள் ஊடாக நோய்த்தடுப்பு தடுப்பூசியை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தட்டம்மை நோயை தடுக்கும் வகையில் குழந்தைகளுக்கு தேவையான தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பேற்றோரை கேட்டுக் கொள்கிறோம்.