அரச வருமானத்தை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய சட்டத் திருத்தங்கள் தொடர்பான யோசனைகளை பெற்றுக்கொள்வதற்கான விசேட கூட்டம் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.
அதற்கமைய, உள்நாட்டு இறைவரித் திணைக்களம், இலங்கை சுங்கம் மற்றும் மதுவரித் திணைக்களம் என்பவற்றை ஒழுங்குபடுத்துவதற்குத் தேவையான சட்டத் திருத்தங்களைக் கொண்டுவருவது குறித்து விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.
இங்கு கருத்து தெரிவித்த உள்நாட்டு இறைவரி திணைக்கள அதிகாரிகள், 2023.06.30 வரை நிலுவையில் உள்ள வரி வருமானம் 943 பில்லியன் ரூபா எனவும், பல்வேறு காரணங்களால் அறவிட முடியாத தொகை 767 பில்லியன் ரூபா எனவும், அறவிடக்கூடிய தொகை 175 பில்லியன் ரூபா எனவும் தெரிவித்தனர். அத்துடன், இவ்வருடம் 37 பில்லியன் ரூபா வரி நிலுவை அறவிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் மேலும் விளக்கமளித்தனர்.
ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் 30ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு வரி அறிக்கை கிடைத்தவுடன் இடம்பெறும் செயன்முறையை விளக்கிய அதிகாரிகள், வரி அறிக்கை கிடைத்தவுடன் சம்பந்தப்பட்ட அதிகாரி RAMIS அமைப்பில் தகவல்களை உள்ளிட்டு சிக்கல்களை அடையாளம் கண்டு, பின்னர் ஒரு கணக்காய்வு நடத்தப்படும் எனவும் சில சந்தர்ப்பங்களில் சில தெளிவுபடுத்தல்களை மேற்கொள்வதற்காக மேலதிக தகவல்கள் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சுட்டிக்காட்டினர். அவ்வாறு தகவல்கள் கோரப்படும் சந்தர்ப்பங்களில், பெரும்பாலும் செலுத்துவோர் வேண்டுமென்றே தகவல்களைத் தாமதப்படுத்துவதாகவும் அதிகாரிகள் குழுல் சுட்டிக்காட்டினர்.
வரி அறிக்கையை அதிகாரி கணக்காய்வு செய்ய தற்போதுள்ள சட்டத்தில் 30 மாதங்கள் உள்ளதாகவும், அதன் பின்னர் ஆணையாளர் நாயகத்துக்கு மேன்முறையீடு செய்த பின்னர் மேன்முறையீட்டை விசாரணை செய்வதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். ஆணையாளருக்கு மேன்முறையீட்டு மனுக்களை விசாரிப்பதற்காகாகக் காணப்படும் இரண்டு (02) வருடங்கள் அதிகமானது எனவும் அதனை ஆறு (06) மாதங்களாக குறைப்பது பொருத்தமானது எனவும் இங்கு குழு தெரிவித்தது.
எவ்வாறாயினும், 06 மாதங்களுக்குள் தீர்மானம் வழங்கப்படாவிடின், மதிப்பீட்டுத் தொகையில் மாற்றம் ஏற்படாது என்று கருத வேண்டும் என நீதி அமைச்சர் இங்கு தெரிவித்தார். எனவே, வரி செலுத்துவோர் வரி ஆணைக்குழுவில் மேன்முறையீடு செய்வதாக இருந்தால் மதிப்பிடப்பட்ட தொகையில் குறைந்தபட்சம் 50% ஐ செலுத்த வேண்டும் என்று சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று இங்கு பரிந்துரைக்கப்பட்டது.