மலையகத் தமிழ் மக்களின் பிரச்சினைகளை நாளாந்த சம்பளத்துக்கு மாத்திரம் மட்டுப்படுத்தாமல் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு வீடு, காணி, கல்வி, சுகாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் என ஒவ்வொரு பகுதியிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
மலையகத் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதாகக் கூறி சில அரசியல் கட்சிகள் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ள போதிலும், மக்களின் உண்மையான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தேவையற்றவை என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் ஜீவன் தொண்டமான் இவ்வாறு தெரிவித்தார்.
7 பேர்ச்சஸ் காணி வழங்கப்படுவதாக சில விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் மலையக மக்களுக்கு 10 பேச்சர்ஸ் காணி வழங்கப்படுகிறது. அவ்வாறு யாருக்காவது 7 பேர்ச்சஸ் காணி மட்டும் வழங்கப்படுமாயின் அதுகுறித்து முறையிட்டால் அவர்களுக்கு 10 பேர்ச்சஸ் காணியை வழங்க நடவடிக்கை எடுப்போம் என அமைச்சர் ஜீவன் தொண்டமான், தெரிவித்துள்ளார்.
சுயதொழில் வாய்ப்பை ஊக்குவிப்பதற்காகவே பாரத் – லங்கா வீட்டுத் திட்டத்தின் மூலம் 10 பேர்ச்சஸ் காணி வழங்கும் திட்டம் அமுல்படுத்தப்படுகிறது. “ பிரஜா சக்தி” வேலைத்திட்டத்தின் ஊடாக இந்த சுயதொழில் வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.
மேலும் மலையக மக்களுக்கு முழு உரிமையுள்ள காணி உறுதிப் பத்திரங்களைப் பெற்றுக்கொடுப்பதே எமது எதிர்பார்ப்பாகும். காணி வழங்கப்படும் போது அந்தக் காணி உறுதிப்பத்திரத்தை பெருந்தோட்ட நிறுவனத்திடம் ஒப்படைக்குமாறு பெருந்தோட்டக் கம்பனிகள் கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தது. அதனை நாம் மறுத்திருக்கிறோம். காரணம், நிபந்தனையற்ற முறையில் இந்தக் காணி உறுதிப் பத்திரங்கள் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். பெருந்தோட்டக் கம்பனிகளின் கோரிக்கையை பிரதமர் அலுவலகமும் மறுத்துள்ளது.
அத்துடன், தோட்டத்தில் வேலை செய்தால் மட்டுமே வீடு வழங்கப்படும் என்ற நிபந்தனை இதுவரை இருந்தது. ஆனால் , இலங்கை அரசாங்கத்தின் ஆலோசனையும் சேர்த்து, இந்திய அரசாங்கத்தின் அனுமதியுடன் தோட்டத்தில் பிறந்தால் வீடு என்ற வேலைத் திட்டத்தை அமுல்படுத்தவுள்ளோம்.
இதற்கமைய தோட்டத்தில் பிறந்து, வளர்ந்து, படித்து, தோட்டத்தில் இருந்து ஆசிரியர் தொழில் செய்யும் ஒருவருக்கும் இந்த திட்டத்தின் கீழ் வீடு கிடைக்கும். அதேபோல், கலைஞர்களுக்கும் வீடு கிடைக்கும். அத்துடன்,2015ஆம் ஆண்டு இந்திய வீட்டுத் திட்டத்தில் புறக்கணிக்கப்பட்டவர்களுக்கும் முன்னுரிமை வழங்கி, அளவுகோளின் அடிப்படையில் வீடுகளை வழங்க எதிர்பார்த்துள்ளோம். ஆனால் இந்தப் பணிகள் அரசியல்மயப்படுத்தப்படாது என்பதும் குறிப்பிடத்தக்கது.