ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா, “எமது கட்சியில் ஏற்பட்ட பிளவுகளே தேசிய மக்கள் சக்தியை ஆட்சிக்கு கொண்டுவந்தன” என தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர், “அடுத்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு, தற்போதைய அரசாங்கத்தை தோற்கடிப்போம்” என்றும் உறுதியாகக் கூறினார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;
“தற்போதைய அரசாங்கம் தேர்தல் காலத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் எந்தவொன்றையும் நிறைவேற்றவில்லை. அதற்கு பதிலாக ‘செய்ய மாட்டோம்’ என அறிவித்தவைகளைத்தான் செய்து வருகிறது.
பொருட்களின் விலை அச்சுறுத்தும் அளவுக்கு உயர்ந்துள்ளன. மக்கள் நாளைய வாழ்வை எப்படி சமாளிப்பது எனவே தெரியாத நிலை. அதில் கூட, அரசாங்கம் புதிய வரிகளை அறிமுகப்படுத்தி மக்கள்மீது இன்னும் சுமைகளை திணித்து வருகிறது.
இதன் விளைவாக, இந்த அரசாங்கம் ஒரே ஒரு தவணைக்காலத்திற்கே ஆட்சி செய்யும்.
அநுர குமார திசாநாயக்க அவர்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாகக் கூறியிருந்தாலும், அவரது ‘மீட்டர்’ இயக்கம் இல்லை. ஆட்சிக்கு வந்த 9 மாதங்களில், அளித்த வாக்குறுதிகளில் நூற்றுக்கு 5 வீதம் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது” என விமர்சித்தார்.