2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கான விசாரணைகள் தொடரும் நிலையில், இதுகுறித்த உண்மைகள் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, சட்டமா அதிபரின் ஆலோசனை மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
நேற்று (15) குருநாகலில் அவர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில்,
“நாங்கள் சமீபத்திய விவாதத்தில் பிள்ளையான் (சிவநேசதுரை சந்திரகாந்தன்) குறித்து குறிப்பிட்டோம். அவர் ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்பே தகவல் பெற்றிருந்தாரா என்பது குறித்து நான் தெரிவித்தது, மேலதிக விசாரணை தேவைப்படும் ஒரு முக்கியமான விடயம். அதற்கான தகவல்களை நீதிமன்றத்திற்கு விரைவில் தெரிவிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்..
விசாரணைகள் ஏற்கனவே இடம்பெற்று வருகின்றன. விசாரணைகளின் மூலம் கிடைத்த தகவல்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பது அவசியம். விசாரணைகள் தொடரும் நிலையில், சில தகவல்களை தற்போதைய கட்டத்தில் ஊடகங்களுக்கு தெரிவிக்க முடியாது.
முக்கியமாக, விசாரணை முடிவுகள் மற்றும் நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், இது ஒரு வழிநடத்தல் அடிப்படையில் நடந்துவரும் சட்ட செயல்முறை..” எனவும் அவர் தெரிவித்தார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இத்தாக்குதல்களில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பல்வேறு விசாரணைகள் நடத்தப்பட்டாலும், முழுமையான நியாயத்திற்கான தேடல் தொடர்கிறது. தற்போது அரசாங்கத்தினர் நேரடியாக நீதிமன்றத்தில் உண்மைகளை சமர்ப்பிக்க தயாராக இருப்பது, இந்த வழக்கின் வழிநடத்தலுக்கு புதிய திருப்பமாகக் கருதப்படுகிறது.