இலங்கையின் கிராமியப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதைக் குறிக்கோளாகக் கொண்டு, “தேசிய தொழிற்துறை திட்டமிடல் மூலோபாய சபை”யை எதிர்காலத்தில் ஸ்தாபிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இன்று தெரிவித்தார்.
இச்சபையானது இலங்கையின் வர்த்தகத் துறையை மேம்படுத்துவதற்குத் தேவையான தொழில்நுட்ப, விஞ்ஞான மற்றும் ஏனைய ஆலோசனைகளை வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்ற பிரதேச அபிவிருத்தி வங்கியின் 40வது ஆண்டு நிறைவு விழாவில் பிரதமர் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார்.
இவ்விழாவில் கருத்து தெரிவித்த பிரதமர், “கிராமியப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக, பிரதேச அபிவிருத்தி வங்கி, சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கு வழங்கி வரும் ஆதரவு மிகவும் பாராட்டத்தக்கது.
தொழில்முனைவோருக்கு இயல்பாகவே திறமைகள் இருப்பினும், அத்திறமைகளை வளர்த்தெடுப்பதற்கு நிதிப் பலம் இல்லாத கிராமிய மக்களை அணுகி, அவர்களுக்குத் தேவையான மூலதனம், தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் சந்தைப்படுத்தல் அறிவு ஆகியவற்றை உரிய முறையில் வழங்கி, அவர்களை சர்வதேச மட்டத்திற்கு உயர்த்துவதற்கு நீங்கள் வழங்கிவரும் ஆதரவு பாராட்டத்தக்கதாகும்.
’வளமான நாடு, அழகான வாழ்க்கை’ எனும் எமது இலக்கை யதார்த்தமாக்கி, கிராம மட்டத்தில் தேசிய பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்குப் பெரிதும் பங்களித்து வரும் வங்கியாக பிரதேச அபிவிருத்தி வங்கியைக் குறிப்பிடுவது பொருத்தமானது என நான் கருதுகின்றேன்,” என்றார்.
“நான் இங்கு வந்தபோது, பிரதேச அபிவிருத்தி வங்கியின் அதிகமான வாடிக்கையாளர்களும், பெரும்பாலான வங்கி ஊழியர்களும் பெண்களே என்பதை அறிய முடிந்தது. சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களில் பெரும்பாலானோர் நம் நாட்டின் பெண்கள் ஆவர். அவர்களுக்கு உங்கள் நிறுவனம் பெரும் பக்கபலமாக இருந்து வருகின்றது,” என்று பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.
அதேபோல், இந்த ஆதரவைத் தொடர்ந்தும் வழங்கி, நமது நாட்டின் கிராமிய மக்களின் பொருளாதார பலத்தை மேம்படுத்துவதற்கு எமது அரசாங்கத்திற்கு உங்களது ஒத்துழைப்பை வழங்குமாறு நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்,” எனப் பிரதமர் தனதுரையில் தெரிவித்தார்.