2023 ஆம் ஆண்டுக்கான சர்வதேச நீர் மாநாடு எதிர்வரும் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. ‘CEWAS’ என்ற எமது அமைச்சுக்குரிய நீர் மற்றும் சுகாதாரத்திற்கான மேம்பாட்டு மையத்தில் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நீர்சார் துறைகளில் நிலவும் பிரச்சினைகள், புதுப்பிக்கத்தக்க சக்தியை நீர்வளத்துறைக்கு எவ்வாறு பயன்படுத்துவது, நீர்வழங்கலின்போது நவீன தொழில்நுட்ப பயன்பாடு, தற்போதைய சூழ்நிலைக்கேற்ப எவ்வாறு கொள்கைகளை மாற்றியமைத்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் மாநாட்டில் கவனம் செலுத்தப்படவுள்ளது.
மழைநீர் மூலம் பாதுகாப்பான குடிநீரை பெறுவதற்கான பொறிமுறை பற்றியும் ஆராயப்படும் .
மாநாட்டில் பங்கேற்கும் துறைசார் நிபுணர்கள் மற்றும் புத்திஜீவிகளிடம் இது சம்பந்தமாக ஆலோசனைகள், கருத்துகள் பெறப்படும். மக்களுக்கு சுத்தமான – சுகாதார பாதுகாப்புடைய குடிநீரை வழங்குவதே எமது பிரதான நோக்கம். இந்த இலக்கை நோக்கிய பயணத்தை துரிதப்படுத்துவது சம்பந்தமாகவும் கலந்துரையாடல்கள் இடம்பெறும்.
நீர் வீண்விரயத்தை தடுப்பதற்கான – கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் சம்பந்தமான வழிகாட்டல்களும் முன்வைக்கப்படும்.
தேசிய நீர்வழங்கல் அதிகாரசபையால் எமது நாட்டில் 48 சதவீதமானோருக்கு குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் சுத்தமான குடிநீரை வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.