“தெஹிவளை ரயில் நிலையத்தில் தற்போதுள்ள பாதுகாப்பின்மைக்கு தீர்வாக, அதைச் சுற்றியுள்ள மதிலை விரிவுபடுத்துதல், ரயில் பயணிகளுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், ரயில் மூலம் பொருட்களை கொண்டு செல்வதை எளிதாக்குதல், மாற்றுத்திறனாளிகள் ரயில் பயணிகளுக்கு வசதிகளை வழங்குதல் மற்றும் அடையாளம் காணப்பட்ட பல தேவைகளை பூர்த்தி செய்வதற்கு துரித நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
தெஹிவளை ரயில் நிலையத்தின் குறைபாடுகள் குறித்து ஆராய்வதற்கான விசேட கண்காணிப்பு விஜயத்திால் (17) கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
100 ரயில் நிலையங்களை நவீனமயமாக்குவதற்காக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வழங்கிய அறிவுறுத்தல்கள் மற்றும்அனுமதியின் பேரில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் இந்த விசேட கண்காணிப்பு விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டது.
தெஹிவளை மாநகர சபையின் மேயர், இலங்கை பொலிஸார் மற்றும் இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் ரயில்வே திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்..
“இந்த ரயில் நிலையத்திற்கு அருகில் ஏராளமான பேருந்துகள் நிறுத்தப்படுகின்றன. அந்தப் பேருந்துகளில் இருந்து வரும் மக்களுக்கும், ரயில் பயணிகளுக்கும் கழிப்பறை வசதிகள் இல்லை. இது தொடர்பாகவும், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையிலும், பொருளாதார வளர்ச்சியை உருவாக்கும் வகையிலும், தெஹிவளை ரயில் நிலையத்திற்குச் சொந்தமான, தற்போது பயன்படுத்தப்படாத நிலம், குத்தகை அடிப்படையில் நகர சபைக்கு வழங்கப்படும், மேலும் அங்கு சுற்றுலாப் பயணிகளுக்கு உணவருந்தும் வசதிகளுடன் கூடிய கழிப்பறை அமைப்பு மற்றும் கடைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான திட்டங்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு எனது மேற்பார்வைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
தெஹிவளை ரயில் நிலையத்தின் புதுப்பித்தல் இரண்டு மாதங்களில் தொடங்கும், மேலும் இரண்டாம் கட்டமாக இந்தப் பணியை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.” என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.