சமூகத்திற்கு உண்மையான தகவல்களைக் கொண்டு செல்லும் வகையில், புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து நடைபெறும் உரையாடல்கள், கருத்துப் பரிமாற்றங்கள் மற்றும் விமர்சனங்கள் மிகவும் முக்கியமானவை என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.
புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து மேல் மாகாண கல்வி அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு, நேற்று(17) மேல் மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதமர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர், “புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து அனைவரும் பெரும் அக்கறை கொண்டிருப்பது சமூகத்தில் ஏற்பட்டுள்ள உரையாடல்கள் மூலம் தெளிவாகத் தெரிகிறது.
கல்விச் சீர்திருத்தம் குறித்து மக்கள் மத்தியில் பெரும் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. அதனாலேயே பலரும் பல்வேறு கருத்துகள், கருத்துரைகள் மற்றும் விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். இது வரவேற்கத்தக்க நிலைமையே. இதன் மூலமே எம்மால் சிறந்த நிலையை அடைய முடியும்,” என்றார்.
“நாம் அரசாங்கம் என்ற வகையில், கொள்கைகளை உருவாக்கும் இடத்திலிருந்தே கல்வி மீது பெரும் கவனம் செலுத்துவோம் என வாக்குறுதி அளித்தே ஆட்சிக்கு வந்திருக்கின்றோம். எமது கொள்கைப் பிரகடனத்திலும், எமது அரசியல் மேடைகளிலும் நாம் இதைக் கூறியுள்ளோம். இது இன்று நேற்று ஆரம்பித்த விடயமல்ல.
நாம் அனைவரும் இந்த நாட்டின் அபிவிருத்தி இலக்குகளுக்காகவே குரல் கொடுத்தோம். ஆயினும், அபிவிருத்தி இலக்குகளை அடைவதை மாத்திரம் இந்த சமூகம் எதிர்பார்க்கவில்லை. கல்வியிலும் பாரிய மாற்றம் ஏற்பட வேண்டும் என எதிர்பார்க்கிறது,” என்று அவர் சுட்டிக்காட்டினார்.
“ஆகையால், உத்தேசக் கல்விச் சீர்திருத்தம் மூலம் நாம் எதிர்பார்ப்பது, குறுகிய அறிவை அளிக்கும் புத்தகம், பாடம், பாடத்திட்டம் என்பவற்றுக்கு மட்டுப்படுத்தப்பட்ட தனிநபர் முன்னேற்றத்தை இலக்காகக் கொண்ட நபர்களை உருவாக்குவதல்ல. நாம் எதனை உருவாக்க முயற்சிக்கிறோம்? பரந்த மனமுடைய, சுதந்திர சிந்தனையுடைய, உலகத்தை பரந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடிய, தலைமைத்துவப் பண்புகளைக் கொண்ட மனிதர்களை உருவாக்குவதே எமது இலக்காகும்.”
“பாட வகுப்பை மாத்திரம் இலக்காகக் கொண்டதல்ல இந்த சீர்திருத்தம். இது கட்டமைப்பு மாற்றம் வரை ஐந்து தூண்கள் மீது நிற்கக்கூடிய வகையிலேயே உருவாக்கப்பட்டிருக்கின்றது. அடிப்படைப் பிரச்சினைகளைப் பற்றி எதையும் அறியாது ஜனரஞ்சகமான முடிவுகளை எடுத்ததன் விளைவாகவே இன்று கல்வி இந்த நிலைமைக்கு ஆளாகியிருக்கின்றது,” என்று பிரதமர் மேலும் தெரிவித்தார்.
புதிய சீர்திருத்தத்தால் ஏற்படும் முதன்மை மாற்றம், மாணவர்கள் வேலை உலகில் நுழையக்கூடிய வகையில் அவர்களின் திறன்களை வளர்ப்பதாகும். “நாம் பத்தாம் வகுப்பிலிருந்தே அதனை அறிமுகப்படுத்துகிறோம். சிலர் இந்தத் திருத்தத்தைத் தவறான இடத்தில் பிடித்துக் கொண்டு பல்வேறு அபாண்டக் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள், பொய்யான பிரச்சாரங்களை மேற்கொள்கிறார்கள். சரியான ஆய்வுகளைச் செய்து இதுபற்றிய விமர்சனங்களை செய்யவும், கருத்துகளை முன்வைக்கவும், உரையாடல்களை உருவாக்குவதற்கும், நாம் ஒத்துழைக்க தயாராக இருக்கிறோம்,” என்று அவர் வலியுறுத்தினார்.
கல்வித்துறை சார்ந்த அனைவரும் புதிய சீர்திருத்தத்தைப் புரிந்துகொண்டு சரியான விஷயத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்றும், “நம் நாட்டின் குழந்தைகளுக்காக இந்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க செயற்பாட்டிற்கு ஒத்துழைப்பைப் பெற்றுக் கொடுங்கள். பல பிரிவுகளாகப் பிரிந்து இதனைச் சாதிக்க இயலாது. நாம் அனைவரும் ஒன்றுசேர வேண்டும்,” என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.
குழந்தைகளின் நலனுக்காக புதிய கல்விச் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அனைவருக்கும் இடையிலான உரையாடல் உருவாகுவது அவசியமாகும் என்றும் பிரதமர் கலாநிதி அமரசூரிய தெரிவித்தார்.