அமைச்சின் செயலாளர் ஒருவர், தூதுவர் ஒருவர் உள்ளிட்ட 7 புதிய நியமனங்களுக்குப் பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகப் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
அதற்கமைய, எகிப்துக்கான இலங்கை தூதுவராகத் திருமதி எம்.ஈ.எம். வெனின்கரின் நியமனத்துக்குப் பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது.
அத்துடன், பங்களாதேஷுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக டபிள்யூ.எம். தர்மபாலவின் நியமனத்துக்கும் பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கு மேலதிகமாக, சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் செயலாளராக எச்.எம்.பீ.பி. ஹேரத் அவர்களின் நியமனத்துக்கும் உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது.
மேலும், விமான நிலைய மற்றும் விமான சேவைகள் (இலங்கை) நிறுவனத்தின் தலைவராக ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி, இலங்கை உயிரியல் தொழிநுட்ப நிறுவனத்தின் தலைவராக கலாநிதி எஸ்.டபிள்யூ.எம். ஹெட்டிகே, இலங்கை பத்திரிகைப் பேரவையின் தலைவராக பீ.எம்.எல். பதிரன, இலங்கை அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக ஐ.எஸ். விஜேசேகர ஆகியோரின் நியமனங்களுக்கு உயர் பதவிகள் பற்றிய குழுவின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.