தற்போதைய அரசாங்கத்தின் சுகாதார அமைச்சரும், சுகாதாரத் துறையுடன் தொடர்பான பல்வேறு நிறுவனங்களில் அவருக்கு நெருக்கமானவர்களும் ஒன்றிணைந்து மேற்கொள்ளும் மோசடியான கொடுக்கல் வாங்கல் மற்றும் தற்போது சுகாதாரத்துறை எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மக்களுக்கு இலவச, எளிதான மற்றும் தரமான சுகாதார வசதிகளை வழங்கும் நோக்கத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சியினரால் விசேட குழுவொன்று நேற்று (5) ஸ்தாபிக்கப்பட்டது.
சுகாதார சீர்கேடு தொடர்பான மேலதிக தலையீடுகளை மேற்கொள்ளும் நோக்கில் எதிர்க்கட்சி ஒன்றியம் இன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கூடி கலந்துரையாடியது.
75 ஆண்டுகால ஜனநாயக வரலாற்றில்,இதுபோன்ற சுகாதாரப் பிரச்சினை நாட்டில் ஏற்பட்டதில்லை என்றும், 24 மணி நேரமும் திருட்டும் மோசடியும் நடந்து வருவதே இதற்கு காரணம் என்றும், இது தொடர்பில் தொடர்ந்தும் கேள்வி எழுப்பும் போது ஏதாவது ஓர் நடவடிக்கை எடுப்பதாகவே சுகாதார அமைச்சர் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.
தரக்குறைவான மருந்துப் பொருட்கள் பாவனையினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எதிர்க்கட்சியில் இருந்து நிவாரணத் திட்டத்தை செயல்படுத்தவும், இந்த மோசடிகளில் ஈடுபட்டு வரும் நபர்களுக்கு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச யோசனை தெரிவித்தார்.