அச்சுறுத்தல் – பொருளாதாரத் தடைகளாலும் ஈரான் மக்களைத் தடுத்து நிறுத்த முடியாது

171

“இலங்கை போன்ற நாட்டிற்கு எனது குழுவுடன் வர முடிந்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். ஈரான் இஸ்லாமிய குடியரசின் அறிவு, தொழில்நுட்பம் மற்றும் வலுவான ஒத்துழைப்புடன் இலங்கையால் பூர்த்தி செய்யப்பட்ட ஒரு சிறந்த திட்டத்தை இன்று மக்களிடம் கையளிக்க கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறேன் என ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி தெரிவித்துள்ளார்.

ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசியுடன் இடம்பெற்ற உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தையின் பின்னர் இரு நாட்டு ஜனாதிபதிகள் தலைமையில் இடம்பெற்ற கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே ஈரான் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

இஸ்லாமியப் புரட்சியின் வெற்றியின் பின்னர், இலங்கையுடன் வலுவான இருதரப்பு உறவுகளை ஏற்படுத்த ஈரான் முயற்சித்துள்ளது. பல வருடங்களாக இந்த உறவுகள் விரிவடைந்து வருகின்றன. இன்று இரு நாடுகளுக்கும் இடையில் மிகவும் வலுவான கலந்துரையாடல் இடம்பெறுகிறது.

அரசியல், பொருளாதாரம், வர்த்தகம், கலாச்சாரம், விவசாயம், சுற்றுலா, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இணக்கப்பாடுகளை எட்டியுள்ளோம்.

ஈரானும் இலங்கையும் நட்பு நாடுகள். இரு நாடுகளிலும் சிறந்த ஆற்றல்களும் திறன்களும் உள்ளன. இந்த திறன்களை பகிர்தல் மற்றும் பரிமாற்றம் செய்துக்கொள்ளும் பட்சத்தில் இரு நாடுகளுக்கும், பிராந்தியத்திற்கும், நன்மை கிட்டும் என நம்புகிறேன்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார, வர்த்தக, விவசாய, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, ஈரான்-இலங்கை பொருளாதார ஒத்துழைப்புக்கான கூட்டு ஆணைக்குழுவின் அடுத்த கட்ட அமர்வை விரைவில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கும் வெளிவிவகார அமைச்சருக்கு ஈரான் ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார்.

அச்சுறுத்தல்களாலும் பொருளாதாரத் தடைகளாலும் ஈரான் மக்களைத் தடுத்து நிறுத்த முடியாது. நாட்டின் அபிவிருத்தி மற்றும் முன்னேற்றத்தை எவராலும் சீர்குலைக்க முடியாது என்பதையும் அன்பான இலங்கை மக்களுக்குத் தெரிவிக்கிறேன்.

மேலும், இன்றளவில், ஈரான் இஸ்லாமிய குடியரசை தொழில்நுட்ப வளர்ச்சியில் உயர் முன்னேற்றம் அடைந்த நாடு என்று கூறலாம். பொறியியல் மற்றும் தொழிநுட்பத்துறையில் எமது நிபுணத்துவத்தை இலங்கையுடன் பகிர்ந்துகொள்வதற்கு தயாராக உள்ளோம்.

இதனால் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிக்க எம்மால் முடியும். உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்புக்கு சிறந்த உதாரணமாகும்.

பாலஸ்தீன் இன்று முஸ்லீம் நாடுகளுக்கும், முஸ்லிம்களுக்கும், உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் அனைத்து மக்களுக்கும் பெரும் சவாலாக உள்ளது.

அதேநேரம் இது பாலஸ்தீன் மற்றும் காஸா மக்களுக்கு எதிரான பெரும் அநீதியாகும். மனிதாபிமானத்திற்கு எதிரான கொடூரமான குற்றமாகும். அதனால் அனைத்து மக்களும் கவலை கொள்கின்றனர். ஆனால், காசாவிலும் பாலஸ்தீனத்திலும் நடக்கும் இனப்படுகொலை மற்றும் குழந்தைகள் கொல்லப்படுவதை ஏன் சர்வதேச நிறுவனங்களும் அமைப்புகளும் தடுக்க முன்வரவில்லை என்பது கேள்விக்குரியாகும்.

இன்று காஸா எல்லையில் குற்றங்கள் மற்றும் குழந்தைகள் படுகொலைகளை காண்பது வருத்தமளிக்கிறது. முஸ்லிம்கள் மட்டுமின்றி, உலக மக்கள் அனைவரும் இதனை கண்டிக்கின்றனர்.

இறுதிவரை இந்த இனப்படுகொலை அல்லது இந்தக் குற்றங்களுக்கு எதிராக எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது, ஐக்கிய நாடுகள் சபையும், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையும் ஏனைய மனித உரிமை அமைப்புகளும் அவற்றின் செயல்திறனை இழந்திருப்பது துரதிர்ஷ்டவசமாகும்.

சியோனிச இஸ்ரேலிய ஆட்சியில் காசாவின் அப்பாவி மக்களுக்கு எதிரான தாக்குதல்களை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருவது குறித்தும், இந்த அப்பாவி மக்களுக்கு தண்ணீர், உணவு, மருந்துகள் உள்ளிட்ட உடனடி உதவிகளை வழங்குவது தொடர்பிலான எங்களின் நிலைப்பாடு குறித்தும் இலங்கை ஜனாதிபதியுடன் ஆலோசித்தேன்.

எங்களை வரவேற்று உபசரித்த இலங்கை ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் ஈரான் அரசாங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கிறேன்.

அத்துடன், இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையிலான அரசியல், பொருளாதார, வர்த்தக, கலாச்சார உறவுகளை விரிவுபடுத்துவதற்கு எல்லையோ தடையோ இல்லை. அரசியல், பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் கலாச்சாரம் ஆகிய துறைகளில் நமது இரு நாடுகளுக்கும் இடையே இருதரப்பு உறவுகளை மேம்படுத்த இரு நாடுகளும் உறுதியுடன் செயற்பட வேண்டும். இருதரப்பு உறவுகளை பலப்படுத்துவதால் பல நன்மைகள் கிட்டுமென நம்புகிறேன்.” என ஈரான் ஜனாதிபதி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here