சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பைச் சேர்ந்த தேரர் பிரதிநிதிகளும், உலகத் தமிழர் பேரவையின் பிரதிநிதிகளும் நேற்று (12) பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவைச் சந்தித்தனர்.
அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் இந்தச் சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டிருந்தனர். சமாதானமான மற்றும் சுபீட்சமான இலங்கைக்கு அவசியமான 6 முக்கிய விடயங்கள் அடங்கிய “இமயமலைப் பிரகடனம்” இங்கு சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.
அனைத்து சங்க அமைப்பையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மகா சங்கத்தினருக்கும், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர்ந்துவாழ் தமிழர்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் 2023 ஏப்ரல் மாதம் நேபாளத்தில் நடைபெற்ற கலந்துரையாடல்களின் பின்னர் இந்தப் பிரகடனம் தயாரிக்கப்பட்டிருப்பதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.
நேபாளத்தில் ஏப்ரல் 2023 இல் அனைத்து தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மகா சங்கத்தினருக்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தமிழ் உறுப்பினர்களுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த வெளியீடு தயாரிக்கப்பட்டது என்பதும் தெரியவந்தது.
இங்கு கருத்துத் தெரிவித்த சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிடுகையில், தேசிய ஒருமைப்பாட்டினூடாக வளமான நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு திறந்த மனதுடன் இந்த முயற்சியில் கலந்துகொள்ளுமாறு சகல இலங்கையர்களுக்கும் அழைப்பு விடுப்பதாத் தெரிவித்தார். இந்தத் தேசிய செயற்பாட்டில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.