இலங்கை தற்போது முழுமையான டிஜிட்டல் மயமாக்கலில் ஈடுபட்டுள்ளது

419

இலங்கையின் பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்தும் வகையில் விரிவான மூலோபாய அடிப்படையில் நாம் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நாம் அனைவரும் ஒன்றிணைந்து தற்போதைய சவால்களை எதிர்கொண்டால், அடுத்த ஒரு சில வருடங்களில் இலங்கையின் பொருளாதார சுபீட்சத்தை உறுதிசெய்யவும் பொருளாதார சவால்களை வெற்றிகொள்ளவும் முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் இன்று (20) நடைபெற்ற உள்நாட்டு இறைவரி ஆணையாளர் சங்கத்தின் 19ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் நிர்வாகத்தில் 82% இச்சங்கத்தில் அங்கத்துவம் பெற்றுள்ளதுடன், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் நிர்வாகத்துடன் நேரடியாகப் செயற்படும் பிரதான உத்தியோகத்தர்கள் மாத்திரமே இச்சங்கத்தில் அங்கம் வகிக்கின்றனர்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது:

எமது அரசாங்கம், இந்தியா, சீனா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களை செய்து செயலாற்றி வருகிறது. இதுமாத்திரமன்றி, அதையும் தாண்டிய வாய்ப்புகளை ஆராய்வதுடன் ஐரோப்பிய யூனியனுடனான வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதே எமது இலக்காகும்.

அந்த இலக்கை அடைவதில் எதிர்கொள்ளும் போட்டியை முறியடிக்கும் வகையில், இலங்கை தற்போது முழுமையான டிஜிட்டல் மயமாக்கலில் ஈடுபட்டுள்ளது. அதன்படி, டிஜிட்டல் பரிமாற்ற முகவர் நிலையம் மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கான ஆராய்ச்சி மையமும் (AI) இணைந்து செயல்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்குள் நாட்டை முழுமையாக டிஜிட்டல் மயமாக்குவதற்கான விரிவான திட்டத்தை உருவாக்குவதே இதன் முதன்மை நோக்கமாகும்.

தனியார் துறையுடன் இணைந்து மேலும் பயிற்சி நிறுவனங்களைத் தொடங்கவும், செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காகவும் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கட்டியெழுப்பப்படும் தொழில்நுட்பங்கள் மற்றும் கைத்தொழில்களை மூலதனமாக வைத்து பிராந்திய விநியோக மையமாக மாறுவதற்கு இலங்கையும் எதிர்பார்க்கிறது.

இதன்போது, நிதி ஒழுக்கத்தை உறுதி செய்வதற்காக, உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மற்றும் ஏனைய வருமானத் திணைக்களங்களுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படுகின்றது. தாமதங்களைத் தவிர்த்து, மேல்முறையீடுகளையும் வருமான வசூலையும் துரிதப்படுத்தும் பொறிமுறை ஒன்று எமக்கு அவசியமாகும்.

நாம் அனைவரும் ஒன்றிணைந்து தற்போதைய சவால்களை எதிர்கொண்டால், அடுத்த ஐந்தாறு வருடங்களில் இலங்கையின் பொருளாதார சுபீட்சத்தை உறுதிசெய்யவும் பொருளாதார சவால்களை வெற்றிகொள்ளவும் முடியும் எனபதில் நம்பிக்கை உள்ளது.” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here